கல்லறைப்பூக்கள்
கேணல் ராயு / குயிலன் PDF Print E-mail
Wednesday, 25 August 2010 08:53
கேணல் ராயு / குயிலன்

அம்பலவாணர் நேமிநாதன்

ஏழாலை, யாழ்ப்பாணம்.

தமிழருக்கு முத்தாய்: 30-05-1961

விடுதலைக்கு வித்தாய்: 25-08-2010

ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவை கள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.

ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக் கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமான வரை அவரின்கீழ் செயற்படும் போராளிக ளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை. அதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொ ள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டு பிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமை ந்தது.

"முடியாது என்றால் முயற்சிக்க வில்லை" என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரய ங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்த வொரு வேலையிலும் முழுத்திருப்தி அடை ந்துவிட மாட்டார்.

ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம் படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட் பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.

ராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற் பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழிநுட்பப் பிரிவான கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனத்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.

விடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத் தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடையங்களை அடிப்படை யாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந் துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்ட த்திலும் மறைபொருளாக இருந்தது.

இந்தியப் படையினருடனான போர்க் காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவ டிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த "ஜொனி" மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.

கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற் புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகு தியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.

பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.

தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான "பசிலன்" எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந் திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.

1996 ஆம் ஆண்டு "ஓயாத அலைகள்-01" இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறி களையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதை விட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.

அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப் பாட்டுத் தொகுதிகள் (குசைந ஊழவெசழட) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறை வான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும். ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப் பட்டுவிடவில்லை. சுயமாக ஆட்லறிக் கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லிய மாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக் கப்பட்டது.

சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணை யையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளி டமும் வளர்ந்திருந்தது. ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறி யீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கை கள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கிய மான பங்கினைப் பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும்பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப் புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.

அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்கு வதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண் ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல் வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறி வைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப் பட்டது.

1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணி யின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படை யணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்தி ருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத் தைப்படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின்கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந் தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத் தினார்.

ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களி லும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை "அப்பா" என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங் கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.

1993 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும். அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார்.

நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப்பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இட த்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.

ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட் சியின் வரணிப்பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளு க்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர் வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை. அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்ப தற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந் துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியி னையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம். ஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசி ரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவி டுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.

பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். "நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் நடவடிக் கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார் ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக் குகள் சொல்ல முடியாது". இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.

1993 ஆம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்பு லித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையி னால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போரா ளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன் அப் போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிரு வரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.

ஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விட யங்களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார். எனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண் டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல். அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற் பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்க ளது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வ தாகவே இருக்கும்.

ஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக் கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொ டிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக் கொண்டி ருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.
அடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயி ருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.

தீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண் ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவ ரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றி யநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில் லை, மூழ்கிப் போகவுமில்லை.

வழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட் டங்களை அறிந்துகொள்வா ர்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது. இந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்கு தல் பிசகியதைக் கேள்விப்ப ட்டராயு அண்ணையே நேரடி யாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத் தைக் கேட்டறிந்தார். படுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற் கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படை யினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

பின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட கேணல் ராயு படைய அறிவியல் தொழி நுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் "நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்"

ஆம்! அவரின் இழப்பு ஒருவரால் மட்டும் ஈடுசெய்யப்பட முடியாததுதான்.

 
தியாகி சிவகுமாரன் PDF Print E-mail
Saturday, 05 June 2010 10:09

தியாகி சிவகுமாரன்

பொன்னுத்துரை சிவகுமாரன் - உரும்பிராய், யாழ்ப்பாணம்.

வீரப்பிறப்பு: 26-08-1950

வீரச்சாவு: 05-06-1974

 

பொன். சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம்இ உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகிஇ அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர்இ அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல்துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி வீரச்சாவை தழுவினார். முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர்.

சிவகுமாரனின் வீரச்சாவு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

 
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ PDF Print E-mail
Wednesday, 17 March 2010 18:33

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ

கனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் - மன்னார்
 

வீரப்பிறப்பு: 25-07-1974
வீரச்சாவு : 11-08-2006

 

 

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக் கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப் படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான்.

அங்குவந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?" என ஏசுகின்றார். "நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" எனக் கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.

"
அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என அனுமதி கேட்கின்றான். அன்னை மௌனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். "நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

உயிராபத்துக்களை உதாசீனம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. "நீ வீட்ட திரும்பிப் போ" எனக் கூறுகின்றார். "இல்லை நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்." எனப் பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப் போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள்.

முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை பூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர்.

இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதி செய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக் கொண்டான். இக் காலகட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப் பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யாக்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி, போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான்.

சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப் படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி, கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப் படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக் கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப் பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது. "பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப் பட்டிருந்தான்.

இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப் பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்ய வேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார்.

அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்.பி.ஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.
ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது.

தொடர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். 'நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்' எனக் கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்ப சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்".

'
நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு' என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான்.

தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக் கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவ முகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காவலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கி விட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகி விட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க, தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

ஜெயசிக்குறுஇராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.

பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக் கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும், இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கி வந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப் பெற்றுக் கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ..II வெற்றி உறுதிப்படுத்தப் படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசி பெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்து கொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே லோஉந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் கெரில்லாவீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும் போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்து விடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக் கொண்டான்.

பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

'
கரும்புலிகளின்வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் நம்பர் வண்எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச் சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனை கூடச் செய்யவில்லை.

செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான்.

பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்து கொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப் பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத்தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான்.

தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்து கொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப் பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து.

தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க, "யாரு கரும்புலி பூட்டோவா?" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை.

பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும் படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்து விடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச் சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்" என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும், குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான்.

மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது.

ஒரு வேவுப்புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத் திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்து விட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த 'புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 'பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே. தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார்.

குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி ஏந்திவந்துள்ளது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

Last Updated ( Tuesday, 23 March 2010 15:04 )
 
கரும்புலி மேஜர் டாம்போ PDF Print E-mail
Wednesday, 17 March 2010 17:13

 

கரும்புலி மேஜர் டாம்போ

காசிப்பிள்ளை தயாபரன்

நாச்சிக்குடா - மன்னார்

 

மன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது டாம்போவுக்கு. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான்.

பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, வாகனத்தை இலாவகமாக ஓட்டும் சாரதித் திறமையே.

"அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்" இது கரும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. 1991 மூன்றாம் மாத நடுப்பகுதி, சிலாபத்துறை இராணுவ முகாம்மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென தீர்மானக்கப்பட்டது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் எனத் தீர்மானிக்கப்பட்டது.

கரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் கிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு திகதி குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். "டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்" என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.

"நான் போறன், வருவனோ தெரியாது" என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.

சண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். "எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்" களத்தில் கட்டளை பிறக்கிறது. என்னால முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்" சொல்லி விட்டு டாம்போ வாகனத்தில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். "நானும் கொஞ்சதூரம் வாறன்" நண்பன் கூற, "வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்" கூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.

டாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….

"வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனாசாமத்திய வீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.

இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.

நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான். நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது

ஆம்! நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

- கதிரவன் -

 
லெப்.கேணல் ஜொனி PDF Print E-mail
Sunday, 07 March 2010 18:22

வீர வணக்கம்

லெப்.கேணல் ஜொனி

( விக்னேஸ்வரன் விஜயகுமார்)

பருத்தித்துறை - யாழ்ப்பாணம்

மண்ணில் முத்தாய் 21-05-1962

மண்ணில் வித்தாய் 13-03-1988

 

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி. கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

நாடுதிரும்பிய ஜொனி மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தி அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டுமிருந்தார். 10.4.85 யாழ்ப்பாணம் காவல்துறைநிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 ஆம் ஆண்டு தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, உட்பட 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.

ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி மைதானத்தையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது. காவல்துறைநிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாமும் மூடப்பட்டது. இதன்பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும், சுதுமலையில் இந்தியப் படையுடன் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது. இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் கொடுத்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சியளித்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார். அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம்- தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம்- அருகாமையில் சென்றுவிட்டோம்- நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை என்ற உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார்.

நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் ஆத்திரமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் கோபத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது சமாதானத்தை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டுவை ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து யோகியை தலைவர் ஜொனியை அழைத்துவர அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் யோகி அவரை விசுவமடுவில் சந்தித்தனர்.

இரண்டு நாட்கள் யோகியும், தங்கேசும் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தனர். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் சமாதானத்தைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, சாமதானம் ஏற்பட சாகுவரை உண்ணாவிரதப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு அங்கு நடந்த இழுபறியுடன் யோகி மேஜர் தங்கேசுடன் ஜொனியை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.

போகின்ற வழியில் சில இடங்களைச் சுட்டிக்காட்டி இந்த இந்த இடங்களில் இந்தியா பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும்- தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

யோகி அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்- சொல்வீர்களா என்று தெரியவில்லை- இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னார்.

பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். தலைவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் நின்றவரிடம் ஜொனியைப் பற்றி யோகி சொன்னார். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னாராம். ஆனால் அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய சப்தத்திற்கு கூட விழித்து விழிப்பாக இருப்பார் தலைவர். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். கதிரை, மேசை எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்ல ஆயத்தமாக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று யோகி கேட்டார், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று. அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று யோகி அடுத்த வினாவைத்தொடுத்தார்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார். இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே.....

Last Updated ( Sunday, 07 March 2010 22:25 )
 
<< Start < Prev 1 2 Next > End >>

Page 1 of 2

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 39 guests online