|
இலங்கையில் தமிழர் வரலாறு - பாகம் 29 |
|
|
|
|
Wednesday, 30 June 2010 22:25 |
|
அமைப்பு ரீதியான எதிர்ப்பின் ஆரம்பம்! இலங்கைத் தமிழ் மக்களின் மாறாத வடுவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் பதிந்தன. இதனைத் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கெüரவத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்தனர். இந்த மாநாட்டிற்குப் பின் தமிழர் வாழும் பகுதிகள் எல்லாம் சிங்கள வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டு தாக்கப்பட்டன. தியாகி சிவகுமாரன் மிகப் பெரிய துணிச்சலுடனும், தீர்மானத்துடனும் தமிழ் மக்களின் கெüரவத்தைக் காப்பதற்காகவும், "தனித்தமிழ்ஈழம்' பெறுவதற்காகவும் ஆயுதம் ஏந்திய இளைஞர் குழுவை வளர்த்தார். ஆரம்பத்தில் இந்தக் குழுவின் லட்சியம், உலகத் தமிழ் மாநாட்டில் கலவரம் விளைவித்தவர்களைப் பழிக்குப் பழி வாங்குவது என்பதே. இந்தக் கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் படுகொலைக்கும் காரணமான போலீஸ் உயர் அதிகாரி சந்திரசேகராவையும், யாழ் தமிழ் மேயர் துரையப்பாவையும் சுட்டுக் கொல்வதுதான் இந்தக் குழுவின் நோக்கமாயிருந்தது. சந்திரசேகராவை சிவகுமார் தேடி அலைந்தார். தெல்லிப்பளை என்னும் இடத்தில் வைத்துக் குண்டு வீசினார். சந்திரசேகரா தப்பிவிட்டார். மீண்டும் யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குப் பக்கத்தில் வேலைக்குச் செல்லும் சமயம் ஜீப்பை மறித்தார். குண்டுகளை எறிந்தார். குண்டு வெடிக்க மறுத்தது. சுழல் துப்பாக்கியை எடுத்துச் சந்திரசேகராவின் மார்புக்கு நேராக வைத்து ஆறு ரவைகளையும் தீர்க்க முயன்றார். ஆறும் வெடிக்க மறுத்தன. மீண்டும் மறைந்தார். அவரது தலைக்கு விலைபோட்டுப் போலீஸôர் தேடினர். ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் ஊரை வளைத்தனர். சிவகுமாரன் யாழ்ப்பாணத்தில் உலாவிக்கொண்டிருந்தார். பணம் தேவைப்பட்டது. யாரும் உதவி செய்யவில்லை. நண்பர்கள் மூவரைக் கூட்டிக்கொண்டு ஓரிடத்திற்குப் போனார். அங்கும் பணம் கிடைக்கவில்லை. ஒரு சிலர் அவரைத் துரத்தினர். அவர்களுக்கு எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. போலீஸôர் சுற்றி வளைத்துக் கொண்டனர். துப்பாக்கியிலோ ரவைகள் இல்லை. உடன் வந்த நான்கு நண்பர்களையும் நாலாபக்கமாக ஓடச்சொல்லிவிட்டு அவரும் ஓடினார். அறுவடை செய்யப்பட்ட புகையிலைத் தோட்டத்தின் அடிக்கட்டை அவரது காலில் குத்தியது. வேகமாக ஓட முடியவில்லை. அப்போது போலீஸôர் அவரைப் பிடித்து விட்டனர். அவரிடம் ஒரு குப்பியில் "சயனைட்' எப்பொழுதும் இருந்தது. தொடையைக் கத்தியால் கிழித்து நஞ்சை ரத்தத்துடன் கலக்க முயற்சித்தார். போலீஸôர் கத்தியைப் பிடுங்கி எறிந்தனர். நஞ்சை வாயில் ஊற்றி விழுங்கினார். போலீஸôர் அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டிலுடன் பிணைத்துப் போட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் காவல் வேறு. ஒருசில மணிகளில் அவர் உயிர் போய்விட்டது. அவர்தான் சிவகுமாரன்! (--லங்காராணி--அருளர் எழுதியதிலிருந்து) 1974 ஜூன் 5-ஆம் நாள் இந்தச் சிவகுமாரன் தன் வாழ்க்கையை ஒரு சீர்திருத்தவாதியாகவே தொடங்கினார். சாதியொழிப்பு, சமபந்தி, சமயச் சீர்திருத்தம் போன்றவற்றில் ஆர்வம் காட்டியவர் சிவகுமாரன். பொதுவாக அவரைக் கம்யூனிஸ்ட் என்று அழைப்பார்கள். குடியரசு, சுதந்திர தினம் போன்ற தேசியக் கொண்டாட்ட நாட்களில் அரசாங்கத்தின் தேசியக் கொடியை தமிழர்கள் ஏற்றி வைத்துக் குதூகலிப்பதை சிவகுமாரன் வெறுத்தார். தனது இல்லத்துக்குப் பக்கத்தில் யாராவது சிங்கள தேசியக் கொடியை ஏற்றி வைத்தால் அறுத்து எறிந்து விடுவார். சிங்களவரைக் குறிக்கும் சிங்கம் ஒன்று கத்தியுடன் நிற்கும் காட்சியைத் தாங்கியதாக இருந்தது அந்தக் கொடி. இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் இந்தக் கொடிக்குத் தமிழர் தலைவர்கள் பயங்கரமாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பயந்து தமிழர்களைக் குறிக்கும் இரண்டு நிறங்களை தேசியக் கொடியில் இணைத்தார்கள். அந்த இரண்டு நிறக்கோடுகளையும் சிங்கத்துக்கு எதிர்ப்புறமாக வைத்தனர். தமிழர்களுக்கு அந்தச் சிங்கம் கத்தியைக் காட்டிக் கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது இந்த தேசியக் கொடி. துரையப்பா தமிழ்ப் பகுதியில் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக ஸ்ரீமாவோவினால் அமர்த்தப்பட்டார். துரோகிகளின் பட்டியலில் இவருக்கு முதலிடம் தந்து அவர் தீவிரவாத இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டார். இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து துரையப்பாவின் நடவடிக்கைகளை ஆராய்ந்தனர். அவர் செவ்வாய்க்கிழமைதோறும் மானிப்பாய் என்னுமிடத்திலமைந்த அந்தோணியார் கோயிலுக்கும், வெள்ளிக்கிழமைகளில் புன்னாலையிலிருந்த வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும் செல்வார் என்று தெரிந்து கொண்டனர். வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் நான்கு இளைஞர்கள் கையில் துப்பாக்கி சகிதம் நின்று கொண்டிருந்தனர். துரையப்பாவின் வண்டி கோயில் வாசலில் வந்து நின்றது. அவரும் காரின் கதவைத் திறந்துகொண்டு இறங்கினார். நான்கு இளைஞர்களில் ஒருவர் வேகமாகச் சென்று, "இப்போது மணி என்ன?' என்று கேட்டார். துரையப்பாவும் மணி சொல்லும் நோக்கத்துடன் கையைத் தூக்கி மணி பார்த்தார். சற்றும் தாமதிக்காமல் மணி கேட்ட இளைஞர் தனது துப்பாக்கியில் இருந்த குண்டுகளைத் தீர்த்தார். துரையப்பா குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். இளைஞர்கள் துரையப்பாவின் காரில் ஏறித் தலைமறைவானார்கள். அவ்வாறு குறிதவறாமல் சுட்டவர் யார் தெரியுமா? அவர்தான் பின்னாளில் தமிழ் ஈழவிடுதலைப் போரில் வீரமரணம் எய்திய விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன். சிவகுமாரனின் வீரமும், தியாகமும் தமிழ் அமைப்புகள் அனைத்திலும் ஒரு வீச்சை உருவாக்கின. 1976-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் புதிய மாற்றம் பெற்றது. அப்போது தமிழர் கூட்டணி தனது ஆரம்பகால கோஷமான தமிழர் சுயாட்சியைக் கைவிட்டுத் "தனி ஈழம்' என்ற கோஷத்தை முன்வைத்துச் செயல்பட ஆரம்பித்தது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில் ""ஆறு வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய "ஒரு தனித்தன்மை வாய்ந்த ஈழமே' தனது நோக்கம்'' என்று பிரகடனம் செய்தது. செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் மூவரும் கூட்டுத் தலைவர்களானார்கள். ""சுதந்திரம் பெறுவதும், தங்கள் உழைப்பின் பயனை தாங்களே அனுபவிப்பதும் தமிழ் மக்களின் சொந்த பிறப்புரிமை என்றும், எந்த ஓர் அரசாங்கமாவது மக்களின் அந்த உரிமைகளைப் பறித்தால் மக்கள் அச்சட்டத்தை தூக்கி எறியக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்'' என்றும் அம்மாநாட்டுத் தீர்மானம் கூறியது. அது மட்டுமல்லாது தொடர்ச்சியான சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு முன்னேற்றம் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளையும் பறித்ததாகவும் தீர்மானம் கூறியது. மேலும் மாநாட்டுத் தலைவர் குறிப்பிடுகையில், தாங்கள் வாழ்வதற்கு தமிழ் அரசை மீண்டும் உருவாக்குவதைத் தவிர வேறு மாற்று வழி ஏதும் தமிழர்களுக்கு இல்லை என்றும் கூறினார். இதை ஒட்டி தமிழ் மக்கள் ஓர் அமைப்பு ரீதியான வெகுஜனத் தன்மையான எதிர்ப்பை சிங்களவர் மீது தொடுக்க ஆரம்பித்தனர். |
|
இலங்கையில் தமிழர் வரலாறு - பாகம் 28 |
|
|
|
|
Wednesday, 30 June 2010 22:24 |
|
உலகத் தமிழ் மாநாடு! சித்திரவதைகள், கொலைகள், கலவரங்கள், எதிர்த்தாக்குதல்கள் இவற்றுக்கு மத்தியில் 1974 பிறக்கிறது. இந்த ஆண்டு நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தும்படி அரசைக் கேட்டுக் கொள்ள ஒரு தூதுக் குழு செல்கிறது. ஆனால் அரசு அதற்கு அனுமதி மறுக்கிறது. அதை ஒரு சவாலாக ஏற்றுத் தாங்களே அம்மாநாட்டை நடத்துவது என்று தமிழ்ச்சமூகம் முடிவெடுக்கிறது. யாழ்ப்பாணத்தில் எப்படியும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1974 ஜனவரி 3-10 நாள்களில் நடத்துவது என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் உறுதியுடன் ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒவ்வொரு தமிழரும் தனது சொந்தக் குடும்ப விழாவாக நினைத்து யாழ்நகரத்தில் குவிகின்றனர். இம்மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து புலவர் செ.ராசு (ஆசிரியர், கொங்கு), பிரகதம் (கொங்கு), கொடுமுடி ச.சண்முகன் (பொதுப்பணித்துறை), இரா.கணேசன் (சென்னைப் பல்கலை.), வண.தந்தை இராசமாணிக்கம் (லயோலா), பேரா.நயினார் முகமது (ஜமால் முகமது கல்லூரி), நீலகண்டன் (பெங்களூர் தமிழ்ச்சங்கம்), ரேன தா தேசா, ராஜ மகள் (கோவா), டாக்டர் சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், டாக்டர்.மோசூர் வாசுகி அம்மையார், டாக்டர் ரவீந்திர குமார், சேத் (இந்தி மொழியறிஞர்), வி.ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய பலருக்கு 'விசா' அளிக்கப்படவில்லை, வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதன் பின்னர் அமைப்பாளர் குழுவில் பங்குபெற்ற கோ.மகாதேவா, மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஆகியோர் தலைமை அமைச்சரைச் சந்தித்துப் பேசியபின்னர்தான் எல்லா நாட்டினருக்கும் விசா வழங்கப்பட்டது. நகர் விழாக்கோலம் பூண்டது. கடைவீதிகளில் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மின்விளக்கு அலங்காரம் இரவில் ஒளி வீசியது. உலகமே கண்டிராவகையில் முழுத்தென்னை, பனை, பாக்கு, மூங்கில், மா மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரங்களில் நடப்பட்டிருந்தன. பனை மற்றும் தென்னை மரங்களில் வாழைமரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு நாகசுரம் முழங்க பூரண கும்ப மரியாதை அளித்து, கொழுக்கட்டை, சீடை, பிட்டு என பண்டைய தமிழ்ப் பலகாரங்கள் தந்து உபசரித்தனர் -என்று மாநாட்டில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட தஞ்சைப் பல்கலைக்கழகக கல்வெட்டு தொல்லியல்துறைத் தலைவர் செ.ராசு வியந்து மகிழ்கிறார். (தகவல்: கொங்கு இதழ் மற்றும் மறவன்புலவு க.சச்சிதானந்தம் எழுதிய 'எனது யாழ்ப்பாணமே'). தமிழ் அறிஞர்களின் பேச்சுகளைக் கேட்க ஆண், பெண் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கில் மக்கள் கூடினர். ஓர் உணர்ச்சி மயமான சூழ்நிலையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. இதைக் கண்டு பொறுக்காத சிங்கள அரசும், இனவெறிச் சக்திகளும் ஆத்திரமும் கோபமும் ஆவேசமும் கொள்கின்றன. இதன் விளைவாக அரசின் காவல்துறை தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்தது. அன்றைய சம்பவங்களை நேரில் கண்ட ஒருவரின் நேரடி வர்ணனை இது- திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் நயினா முகமது உணர்ச்சி மயமாக உரையாற்றிக் கொண்டிருக்கும்போது திடீரென வேறு ஏதோ ஒலிபெருக்கிக் குரல் தூரத்திலிருந்து வந்து மோதியது. என்னவென்று விளங்கவில்லை. அணி வகுத்து வந்த காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். அளவுக்கதிகமாக வீசியதால் நெஞ்சை அடைத்தது. மேடையில் அமர்ந்திருந்தவர்களின் மீதும் வீசினார்கள். தூரத்தில் ஒரு பேருந்தில் உள்ளமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோர் மீதும், பேருந்திற்குள்ளும் வீசினர். பயந்துபோய் பதுங்க இடம்தேடிப் பறந்து சென்ற மக்களை பிரம்பால் மிருகத்தனமாக அடித்துத் தாக்கினர் காவல்துறையினர். நாலாபக்கமும் சிதறி ஓடினர் மக்கள். பலர் மிதிபட்டுத் துயருற்றனர். தாயைப் பிரிந்த குழந்தைகள், கணவரைப் பிரிந்த மனைவியர் போன்று ஏராளம். அருகிலே சேறு நிறைந்த குளம் ஒன்று இருந்தது. அதில் பலர் விழுந்தனர். செருப்புகளைத் துறந்தனர். பல பெண்கள் புடவைகளை இழந்து ஓட வேண்டியதாயிற்று. தீரமிக்க யாழ் நகர் இளைஞர்கள் தமக்கு வந்த இடரையும் பொருட்படுத்தாது பலரைக் காத்தனர். குளத்தில் விழுந்தவர்களைத் தூக்கிவிட்டனர். தனியாக நின்ற குழந்தைகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்ணீர்ப் புகையால் திணறிய இந்திய நாட்டினரை யாழ் நகர் இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரையும் காப்பாற்ற முனைந்தனர். புலவர் இராசு அவர்களை வீரசிங்கம் மண்டபத்திற்குப் பின்புறம் இழுத்துச்சென்று சுற்றுச்சுவர் மீது ஏற்றிப் பின்பக்கம் குதிக்க வைத்தனர். குதித்த இடம் சாக்கடை. அதிலேயே சற்றுதூரம் நடந்துசென்று சாலையேறி, தொடர்ந்து வந்து, எதிரில் வந்த கார் ஒன்றில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் பின்னர் வந்து, இவர் வீடு வந்து சேர்ந்ததை உறுதி செய்துகொண்டனர். அதே போல இரவீந்தர்குமார்சேத், நயினார்முகமது, சனார்த்தனம் ஆகியோர் தத்தம் துணிமணிகளை இழந்து பல துயருற்று பத்திரமாக வீடுவந்து சேர்ந்தனர். தென் ஆப்பிரிக்காத் தமிழர் முதியவர். கையில் அடிபட்டு வீடு வந்து சேர்ந்தார். காவல்துறையினர் சனார்த்தனம் பேசக்கூடாதென்று சொல்லியிருந்ததாகவும், பேராசிரியர் நயினார்முகமதுவின் பேச்சை தவறாகப் புரிந்துகொண்டு, இரா.சனார்த்தனம் பேசுவதாகக் கருதிக் கூட்டம் சட்டவிரோதமானதென்று அறிவித்துக் கலைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கூட்டத்தில் குழப்பம் என்பது பச்சைப் பொய். எனினும் மேடையில் அமர்ந்திருந்த இந்தியர்களையும், பிற வெளிநாட்டாரையும் பாதுகாக்க முயலாமல் மேடை மீதும் கண்ணீர்ப்புகை வீசியதைப் போன்ற கொடுமை வேறு இருக்க முடியாது. யாழ் நகரப் படுகொலைக்கு இலங்கை அரசு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்க வேண்டும்! தமிழன்னையின் கண்ணீர்த்துளிகள் வீணாவதில்லை. (கொங்கு இதழில் வந்தபடி). அதன் விளைவாக மின்சாரம் தாக்கியும் கூட்டத்தில் சிக்குண்டும் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர். விழாவிற்கு வந்த உலகத் தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதைய யாழ்மேயர் ஆல்பிரட் துரையப்பா அளித்த விருந்துக்குப் போகக்கூடாது என்று 'பொடியன்கள்' (தமிழ் இளைஞர்கள்) தடுத்தனர். அவர் தமிழ்மாநாட்டு எதிரி என்பது அவர்களின் வாதம். 'கவரிமான்' என்ற பெயரில் யாழ் நகர இளைஞர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கினர். 'பொடியன்களை' பெரியவர்கள் நம்பினர். ஈழத் தமிழர் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு! |
|
|
இலங்கையில் தமிழர் வரலாறு - பாகம் 27 |
|
|
|
|
Wednesday, 30 June 2010 22:22 |
|
தீவிரவாதத்தின் ஆரம்பம்! நாடு தழுவிய ஓர் அதிருப்தியின் விளைவாக எழுந்த தீவிரவாதத்தால் மாபெரும் ஆயுதக் கலகத்தை 1971-இல் இலங்கை சந்தித்தது. 1971 கலகத்தைத் தலைமை தாங்கி நடத்தியது ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணி ஆகும். அதுவரையில் நாட்டில் நிலவி வந்த இனவாத அரசியலையும், இன உணர்வுகளையும் மதிப்பீடு செய்ய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். உற்சாகத்தின் உந்துதலினால் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிக் கலகம் செய்தனர் ஜே.வி.பி. (ஒயட) என்று பரவலாக அறியப்படும் ஜனதா விமுக்திப் பெரமுன அமைப்பினர். சாதாரண மக்களும் மலையகத் தமிழ் இளைஞர்களும் கூடப் பங்கேற்ற இந்தக் கலகத்தில் பெரும் அளவிற்குச் சிங்கள இளைஞர்களும் பங்கு பெற்றனர். இலங்கை இடதுசாரி மார்க்சியவாதிகள் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாகப் புதுவகையில் உருவான ஒரு தீவிரவாத இயக்கமே ஜனதா விமுக்தி பெரமுன. இதன் தலைவர்கள் தலைமறைவாக இருந்தே இவ்வியக்கத்தை நிறுவினர். மாஸ்கோவில் உள்ள லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்த உரோகண விஜயவீரா இதற்குத் தலைமை தாங்கினார். 1970-க்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விமர்சனத்துடன் ஆதரித்தது இது. ஆனால் அதே சுதந்திரக் கட்சிதான் பின்னாளில் உரோகண விஜயவீராவைக் கடுமையான முறையில் ஒடுக்கியது. இந்தக் கலகத்தில் அரசு இயந்திரமே ஸ்தம்பித்துவிட்டது. இதனை ஒடுக்குவதற்குப் போதிய ஆயுதங்கள் அரசிடம் இருக்கவில்லை. பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து ராணுவ உதவிகளைப் பெற்றது ஸ்ரீலங்கா அரசு. நாடு முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களும் கலகம் செய்த இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. பயந்த இலங்கை அரசு இந்தியாவிற்கு உதவி கோரி, கோரிக்கை விடுத்தது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மத்தியில் இருந்த இந்திரா அரசு ஸ்ரீமாவோவின் வேண்டுகோளுக்கு இணங்கி கப்பற்படையை இலங்கைக்கு அனுப்பியதோடு, பெருமளவிலான ஆயுதங்களையும் துருப்புகளையும் கூட அனுப்பியது. அவர்கள் அங்கு சென்று கலவரத்தை ஒடுக்கினர். இந்தக் கலகத்தில் 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதன்றி லட்சக்கணக்கான இளைஞர்களும் அதன் தலைவர்களும் மற்றும் அதோடு இணைந்த நவசமசமாஜக் கட்சியினரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். வரலாற்றில் பதியத்தக்க இந்த எழுச்சி, பரந்த அளவில் பரவி நாட்டையே குலுக்கிய அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைக்கு மறுக்க முடியாத சான்றாகவும் குறிக்கப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமின்றிச் சர்வதேச இடதுசாரி அணியினருக்கும் ஓர் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்த இயக்கம் தோல்வி அடைய முக்கிய காரணம் மார்க்சியக் கொள்கைகளைப் பேசிய இவர்கள், அதற்கு நேர்மாறாகச் சிங்கள இனவெறிக் கொள்கைக்கு பலியானதுதான். அதுமட்டுமின்றி, கட்டுப்பாடு நிறைந்த அமைப்பாக இவர்கள் இல்லாததும், சரியான அரசியல் சிந்தனையுடன் வளராததும் தமிழினச் சிறுபான்மையினரின் உணர்வுகளைப் பிரதிபலிக்காததும் ஆகும். இலங்கை மக்களின் அரசியல் வரலாற்றில் அரசுக்கு எதிராக ஆயுதம் எடுத்துப் போராடிய இந்தக் கலகத்தின் வீச்சு பின்வரும் நாளில் தமிழ் தேசிய உணர்வுப் போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது. ஆக, இவ்விதத்தில் சோசலிச மனிதாபிமானத்தைப் பேசிய ஸ்ரீமாவோ அரசு மிகப் பெரிய படுகொலைக்குக் காரணமானது. பிற்காலத்தில் இலங்கைத் தீவு சந்திக்க இருக்கும் தீவிரவாதப் போர்களுக்கும், போராட்டங்களுக்கும், குருதியின் கோர தாண்டவத்துக்கும் ஆரம்பமாக அமைந்தது இந்தக் கலகம்தான். இந்த நிலையில்தான் ஸ்ரீமாவோ அரசு, அவசர நிலைச் சட்டத்தையும், அடக்குமுறைச் சட்டத்தையும் மக்கள் மீது திணித்தது. போர்க்குணமிக்க சிங்கள இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒடுக்குமுறைக்குப் பின், தமிழர்கள் மீது தனது சட்டரீதியான, அமைப்பு ரீதியான இனவாத ஒடுக்குமுறையைத் திருப்பியது இலங்கை அரசு. அதன் விளைவே இலங்கை "குடியரசு' ஆகும் சட்டமும், புதிய அரசியல் அமைப்பு உருவாதலும் ஆகும். இதில் அனைத்து அடிப்படை உரிமைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் ஒதுக்கிவிட்டுச் சிறுபான்மை மத, இன பாதுகாப்புகளைத் தூக்கி எறியும் வகையில் சிங்களம் தேசிய மொழி என்றும், புத்த மதத்தை அரசு மதமாகவும் அறிவிக்கப்பட்டது. கல்வி தரப்படுத்துதல் சட்டத்தின் மூலம் பெருமளவிற்கு பாதிப்படைந்த தமிழர்கள் இந்தப் புதிய அரசியல் சட்டத்தால் கொதிப்படைந்தார்கள். அரசியல் நிர்ணய சபையில் தமிழர்களால் அளிக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டு 1972 மே 22-ஆம் நாள், இலங்கை அரசியலில் தமிழர்கள் பங்கேற்கவும், ஆட்சியில் பங்கேற்கவும் சுமுகமான முறையில் சிங்களர்களோடு இணைந்து வாழும் நிலைமையும் அடியோடு ஒழிக்கப்பட்டது இச் சட்டங்கள் மூலம்தான். இதனால் தமிழ் இனம் தனிமைப்படுத்தப்பட்டுச் சிங்கள இனத்திற்கு எதிர்முகாமாகத் தள்ளப்பட்டது. இந்தப் பிற்போக்கு ஒருசார்புச் சட்டத்திற்கு ஆதரவாக அனைத்துச் சிங்களக் கட்சிகளும், இயக்கங்களும் (இடதுசாரிக் கட்சிகள் உட்பட) செயல்பட்டன. சிங்கள அரசியல் கட்சிகளோடு கூட்டோ, அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதோ இனிமேல் இயலாத காரியம் என்று தமிழர்கள் நினைக்க ஆரம்பித்ததும் அதுமுதல்தான். இதனையொட்டி தமிழர் மத்தியில் ஐக்கியம் ஏற்பட ஆரம்பித்தது. அரசுக்கும், சிங்கள இனவெறியருக்கும் எதிராகத் தமிழர்கள் ஆத்திரம் கொண்டார்கள். இந்த நிலையில்தான தமிழ் மாணவர்களைக் கொண்ட தமிழ் மாணவர் பேரவையும், தமிழ் அரசியல் அமைப்புகள் ஒன்றாக இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாகின. இதன் விளைவாக விசாரணையற்ற கைதுகளும், அரசின் அடக்குமுறை ஆர்ப்பாட்டங்களும் தொடர்கதையாக ஆனது. தமிழ் இளைஞர்கள் ஆவேசம் அடைந்தனர். சத்தியாக்கிரகம் மூலம் அமைதி வழியில் எதிர்ப்புகளைக் காட்டுவது என்பது அர்த்தமற்றது என்ற எண்ணம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்தது. தமிழ்ச் சமூகம் வாழ முடியாதபடி வேலையில்லாத் திண்டாட்டமும், அடக்குமுறையும் அதிகரித்ததால், இதை எதிர்த்துக் கடுமையான முறையில் போராட்டங்கள் வெடித்து வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. குடியரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு (1972) மீண்டும் நடந்த இடைத்தேர்தலில் (1975) வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அது தமிழ் மக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்தத் தமிழ் உணர்வு வேகத்தால் உந்தப்பட்டு தமிழ் கூட்டணிக்கு தமிழர் சுயாட்சிக்கான திட்டங்களையும், இயக்கங்களையும் கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் பயணம் செய்த சிங்கள மந்திரியின் கார் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். தியாகராஜன் குடியரசுச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தார் என்ற காரணத்திற்காக அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. நல்லூர்க் கிராம கவுன்சிலின் பழைய தலைவரான குமார குலசிங்கம் துப்பாக்கியால் சுடப்பட்டார். இவ்விதத்தில் தமிழ் உணர்வின் வேகத்தால் தமிழ் தேசியப் போர்க்குணம் மிக்க இளைஞர்கள் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர். அரசு இயந்திரம் தமிழர் வாழும் வடபகுதி முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அதிகாரத்தின் துணையுடன் அரசு வன்முறை வெறியாட்டத்தை தமிழர் மீது தொடுத்தது. தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. பொதுமக்களை அச்சுறுத்துவதும், விசாரணையின்றிக் கைது செய்வதும் தொடர்ந்து நடந்தது. ஒரு சோக வரலாற்றுக்கு தொடக்கம் எழுதியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியரசுப் பிரகடனமும் அதற்குப் பின்னால் எற்பட்ட மாற்றங்களும். நேரடியாகக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தபிறகு சிங்கள இன ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு, சிறுபான்மையினரின் நலன் புறக்கணிக்கப்படத் தொடங்கியது. அழிவின் ஆரம்பம் அப்போதுதான் ஆரம்பமாகியது. |
|
இலங்கையில் தமிழர் வரலாறு - பாகம் 26 |
|
|
|
|
Wednesday, 30 June 2010 22:21 |
|
ஸ்ரீமாவோவின் ராஜதந்திரம்! 1956 ஜூன் மாதம் "சிங்களம் மட்டும்' சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் சுருக்கமாக ஒருசில வரிகளில் எழுதப்பட்டிருந்தது இந்தச் சட்டம். இடதுசாரிகளும், தமிழ் அங்கத்தவர்களும் சட்டத்தை எதிர்த்து வாதாடி வாக்களித்தனர். தமிழ் அங்கத்தவர்கள் பாராளுமன்றத்துக்கு முன்னே காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்தனர். அரசாங்க ஆதரவாளர்களான சிங்களக் குண்டர்களால் தாக்கப்பட்டனர். அன்று சிறிய அளவில் நடந்த அந்தத் தாக்குதல் வரப்போகும் ரத்தக் களரியையும் சாம்பலையும் அறிவிப்பதுபோல் அமைந்துவிட்டது. மறுபுறம் "சிங்களம் மட்டும்' சட்டம் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தை அறிவித்தது. தேசியமயமாக்கல் மூலமும் வெளிநாட்டு உதவியுடனும் புதிய அரசுப் பொருளாதாரத் துறையொன்றினை விருத்தி செய்வதில் பண்டாரநாயக்கா அரசாங்கம் கவனம் செலுத்தியது. இதன்மூலம் இரண்டு உடனடி நோக்கங்களை மக்கள் ஐக்கிய முன்னணி அரசு நிறைவேற்ற விழைந்தது. ஒன்று -தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார பலத்தைக் கட்டுப்படுத்தல். மற்றது -வளரும் புதிய அரசு கூட்டுத்தாபனங்களில் முடிந்தவரை அரசாங்கத்துக்குச் சார்பான சிங்கள புத்த ஜீவிகளுக்கும் கீழ்மட்ட ஆதரவாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்குதல். அரசு கூட்டுத்தாபனங்களே புதிய சிங்கள புத்த உணர்வுள்ள முகாமையாளர்களை உருவாக்கும் கூடங்களாயின. இத்தகைய அரசு முதலாளித்துவம் தோன்ற சில புறநிலைக் காரணிகள் இருந்தன. சில முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு வேண்டிய மூலதனக் குவியலும் ஈடுபாடும் தனியார் துறையில் இருக்கவில்லை. அரசின் நேரடி உதவியுடன் தனியார் துறை இந்தத் துறைகளுக்குள் செல்லக்கூடிய கொள்கை ரீதியான சாத்தியப்பாடுகள் இருந்தன. ஆயினும் பண்டாரநாயக்கா அரசு அந்த வழியைப் பின்பற்றவில்லை. அரசு மூலதனம் மட்டுமே இருந்த முதலீட்டுச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியது. பண்டாரநாயக்கா அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை சோஷலிச நாடுகளின் ஆதரவைப் பெற்றது. 1956-க்குப் பின்புதான் இலங்கை சோஷலிச நாடுகளுடன் ராஜதந்திரத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. இதன் விளைவாக சோஷலிச நாடுகளின் பொருளாதார உதவிகள் வரத்தொடங்கின. வறண்ட பிரதேசத்தில் காடுகள் வெட்டப்பட்டு, நிலம் அபிவிருத்தி செய்யப்பட்டு நீர்ப்பாசன வசதிகளுடன் அரசு செலவில் நிலமற்ற விவசாயிகளைக் குடியேற்றும் கொள்கை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆரம்பித்திருந்தது. 1938-ஆம் ஆண்டில்தான் இந்தக் கொள்கை அப்போது விவசாய அமைச்சராயிருந்த டி.எஸ். சேனநாயக்காவினால் முழு உருப்பெற்றது. சுதந்திரத்திற்குப்பின் எல்லா அரசாங்கங்களும் இந்தக் கொள்கையைப் பின்பற்றின. சிங்களப் பிரதேசங்களில் உள்ள பெருநிலச் சொந்தக்காரர்களின் உடைமை உறவுகளை மாற்றுவதைத் தவிர்க்கும் ஒரு வழியாகவும் இந்தக் கொள்கை அமைந்தது. நிலமற்ற சிங்கள விவசாயிகளை அரசு செலவில் அரசு காணிகளில் குடியேற்றும் திட்டங்கள் பல சந்தர்ப்பங்களில் வேண்டுமென்றே தமிழ்ப்பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்டன''.* "புத்த பிக்குகளின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து போக பண்டாரநாயக்கா மறுக்கிறார். இதனால் 1959-இல் சோமராம தேரோ என்ற புத்தபிக்கு தனது மஞ்சள் அங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொன்றுவிடுகிறார்'.** பண்டாரநாயக்காவின் படுகொலையைத் தொடர்ந்து, 1960-இல் நடந்த தேர்தலுக்குப்பின் இலங்கையின் பிரதமராகிறார் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் டட்லி சேனநாயக்கா. 4 மாதங்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டுப் பிரதமராகிறார் பண்டாரநாயக்காவின் மனைவியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா. சொல்லப்போனால் 1956-இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு ஸ்ரீமாவோவின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. 1960-இல் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஆரம்பம் முதலே தமிழர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஈழத் தமிழர்களையும், மலையகப் பகுதியில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களையும் பிரிப்பதற்கு இவர் கையாண்ட தந்திரத்தின் ஒரு பகுதிதான் ஸ்ரீமாவோ-சாஸ்திரி உடன்பாடு என்பது. இதன்படி, மலையகப் பகுதிகளில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1990-இல் எப்படி இந்திய அமைதிப்படையைக் காரணம் காட்டி, ஈழத்தமிழர்களை அதிபர் பிரேமதாசா இந்தியாவுக்கு எதிராகத் திருப்பினாரோ, அதேபோல, மலையகத் தமிழர்களைக் காரணம் காட்டி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது ஸ்ரீமாவோவின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! 1965-இல் தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து யு.என்.பி. அரசு ஆட்சி அமைக்கிறது. டட்லி சேனநாயக்காவின் தலைமையில் அமைந்த ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி அரசில் தமிழ் மற்றும் சிங்கள தேசியக் கட்சிகள் உள்பட ஆறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. "வடக்கு, கிழக்கில் ராணுவத்தைக் குவியுங்கள். சிங்களவரைக் குடியேற்றுங்கள், தமிழரை வெளியேற்றுங்கள்' எனக் கொழும்பு பம்பலபிட்டி புத்தவிகாரத்தின் தலைமைப் புத்த பிக்கு அறிக்கை விடுகிறார். டட்லி சேனநாயக்காவின் அரசும் அப்படியே செய்கிறது. இதனால் யு.என்.பி.யுடனான உறவை முறித்துக்கொள்ளத் தமிழரசுக் கட்சி முடிவெடுத்துத் திருகோணமலையில் மிகப்பெரிய மாநாடு ஒன்றினைக் கூட்டுகிறது. இதனைக்கண்ட சிங்களப் பிரதமர், தமிழரசுக் கட்சியுடன் உடன்பாடு காண முயல்கிறார். மாவட்டக் கவுன்சில்களை 1968-இல் அளிக்கும் ஒரு உடன்பாட்டிற்கான தன்மையில் அரசோடு ஒத்துழைத்த ஈழத் தமிழர்களின் தந்தை என்று ஒருமனதாக அனைத்துத் தமிழர்களாலும் மதிக்கப்பட்ட, செல்வா எனப்படும் செல்வநாயகம் ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்ந்த இனவாதக் கொள்கையாலும், துரோகத்தனத்தாலும் 1968-இல் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டார். 1970-இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வருகிறது. இந்தப் பதவிக்கு வரும் நிகழ்ச்சிக்கு சிங்களப் பேரினவாத சக்திகளின் கூட்டும் வெகுஜன கவர்ச்சிகரமான இடதுசாரி முகமூடியுமே காரணமானது. எந்த நாட்டிலுமே கண்டிராத வகையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியானது 1970-77-க்கு இடைப்பட்ட காலத்தில் கொடூரமும், படுகொலைகளும், தீவிரமான ஜனநாயக ஒடுக்குமுறையும், மனித உரிமைகள் பறிக்கப்படுவதுமாக மாறிய காலமாகும். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், மக்களுக்காக இயங்குவதாகக் கூறும் இடதுசாரிகள் இந்த மனிதப் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு அரசுக்குத்துணை நின்றதாகும். இந்தக் காலத்தில் அரசு நிர்வாகம், குழப்பமும், பல வகையான கொள்கை மாறுதலும் நிகழ்ந்த காலமாகும். இந்தக் காலத்தில் பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமானது, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று கூறிக்கொண்டு சிங்கள இனவாத ஆளுமையை நிலைநாட்டிய காலமுமாகும். தனியார் மூலதனத்தைத் தேசியமயம் என்ற கொள்கை அடிப்படையில் அரசு மூலதனமாக்கி அதைச் சிங்கள மயமாக்கிய சதித்திட்டம் நிறைந்த நிகழ்ச்சிப் போக்கு இக்கால கட்டத்தில்தான் நிலவியது. அரசு அமைப்பைத் தாராளப்படுத்தி அதே நேரத்தில் கட்டுப்பாடுகளும் புதிய விதிகளும் கொண்ட நிகழ்ச்சிப் போக்குகளையும் பார்க்க முடிந்தது. இதனால் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம், நாடு தழுவிய அதிருப்திகள், மக்களின் பல்வேறு வகையான எழுச்சிகளை உருவாக்கியது. தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள இளைஞர்கள், மற்றும் அடித்தட்டு மக்களும் கூட அரசின் கொடுமையால் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர ஆரம்பித்தன. *-சமுத்திரன் எழுதிய "இலங்கைத் தேசிய இனப்பிரச்னை' (ஈழ எழுத்தாளர் சமுத்திரன் மாணவப் பருவத்திலிருந்தே இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு, கட்சி சாராது இருந்தவர். பின்னாளில் தமிழ் மக்கள் விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டார்). |
|